தமிழர்கள் பற்றி சர்ச்சை.. மத்திய அமைச்சர் ஷோபா மீது பாயும் அதிரடி நடவடிக்கை.. தேர்தல் ஆணையம் கெடு

March 21st, 2024

பெங்களூர்: தமிழர்கள் குறித்து சர்ச்சையாக பேசிய மத்திய அமைச்சர், பெங்களூர் வடக்கு லோக்சபா தொகுதியின் பாஜக வேட்பாளருமான ஷோபா கரந்தலாஜே மீது தேர்தல் நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஷோபா கரந்தலாஜே மீது நடவடிக்கை எடுக்க திமுக அளித்த புகாரில் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த மார்ச் 1ம் தேதி பெங்களூரில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் திடீரென்று குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுபற்றி பெங்களூர் போலீசார் விசாரித்தனர். குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக கருதப்படும் நபரை பெங்களூர் போலீசார் கைது செய்யவில்லை. அந்த நபரின் உருவம் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியும் அவரை பிடிக்க முடியவில்லை.

அதன்பிறகு என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே உணவக குண்டுவெடிப்பு பற்றி என்ஐஏ விசாரித்து வருகிறார். பல்லாரியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே தான் கர்நாடகாவின் உடுப்பி - சிக்கமகளூர் தொகுதி பாஜக எம்பியும், தற்போதைய மத்திய இணையமைச்சருமான ஷோபா கரந்தலாஜே அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. பெங்களூரில் தமிழர்கள் தான் குண்டு வைத்தார்கள் என்பது போல் அவர் கூறி பரபரப்பை கிளப்பினார். இதுதொடர்பாக, ‛‛தமிழகத்தில் பயிற்சி பெற்றவர்கள் கர்நாடகாவுக்கு வந்து எங்கள் ஓட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். கர்நாடகா மீது தாக்குதல் நடத்தும் அவர்கள் மீது கர்நாடகா காங்கிரஸ் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் போடுவோர் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை’’எனக்கூறினார். ஷோபா கரந்தலாஜேவின் இந்த பேட்டி விவாதமானது. முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மன்னிப்பு கோரி தனது கருத்தை வாபஸ் பெற்றார். இருப்பினும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஷோபா கரந்தலாஜே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இ-மெயிலில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

"மன்னித்துவிடுங்கள்.." தமிழர்கள் குண்டு வைத்ததாக வார்த்தை விட்ட அமைச்சர் ஷோபா கருத்தை வாபஸ் பெற்றார்

இந்த கடிதத்தை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் ஷோபா கரந்தலாஜே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது அவருக்கு எதிராக புகாரை கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியதோடு, ஷோபா கரந்தலாஜே மீது தேர்தல் நடத்தை விதிக்கு உட்பட்டுஷோபா கரந்தலாஜே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக 48 மணிநேரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழர்கள் பற்றி சர்ச்சையாக பேசிய மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே மீது நடவடிக்கை என்பது பாய உள்ளது. இவர் தற்போது உடுப்பி - சிக்கமகளூர் தொகுதி எம்பியாக உள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் அவர் தொகுதி மாறி போட்டியிடுகிறார். பெங்களூர் வடக்கு தொகுதியில் ஷோபா கரந்தலாஜே போட்டியிடுகிறார். இதுதொடர்பாக பாஜக வெளியிட்ட 2வது கட்ட வேட்பாளர் பட்டியலில் ஷோபா கரந்தலாஜேவின் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.