‛‛இப்போது மட்டுமல்ல 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி தொடரும்’’.. அதிமுகவிடம் துண்டுபோட்ட பிரேமலதா

March 21st, 2024

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுகவுடன், தேமுதிக கூட்டணியை இறுதி செய்துள்ள நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றதைப் போலவே, இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26ம் தேியும், மூன்றாம் கட்டம் மே 7ம் தேதியும், 4ம் கட்டம் மே 13ம் தேதியும், 5ம் கட்டம் மே 20, 6ம் கட்டம் மே 25, 7ம் கட்டம் ஜூன் 1ம் தேதியும் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்து வருகின்றன. அதிமுகவை பொறுத்த அளவில் 16 தொகுதிகளில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். அதிமுகவுடன் தேமுதிகவுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர் மற்றும் விருதுநகர் ஆகிய 5 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.

முன்னதாக தேமுதிக செயற்குழுவில், “14 சீட் + 1 ராஜ்ய சபா சீட் யார் கொடுக்கிறார்களோ அவர்களுடன்தான் கூட்டணி” என்று பேசி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது 5 தொகுதிகளுடன் அதிமுகவிடம் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேமுதிகவுக்கு விருதுநகர் உள்பட 5 தொகுதி.. கள்ளக்குறிச்சி இல்லை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த எடப்பாடி

இதில் மத்திய சென்னை, தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் திமுகவிற்கு எதிராகவும், கடலூர், திருவள்ளூர் விருதுநகரில் காங்கிரசுக்கு எதிராகவும் தேமுதிக களம் இறங்குகிறது. விருதுநகர் தொகுதியில் தேமுதிகவுக்கு ஓரளவு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தொகுதியில் விஜயகாந்த்-பிரேமலதா மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும்” என்று கூறியுள்ளார்

அதாவது, “முதன்முதலாக அதிமுக அலுவலகத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்ந்த இடம் இது. 2011ல் ஏற்பட்ட வெற்றிக் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. 2011ல் கிடைத்த வெற்றிபோல் இப்போதும் மீண்டும் கிடைக்கும். 2026-ம் ஆண்டிலும் இந்தக் கூட்டணி நிச்சயம் தொடரும். நாளை நல்ல செய்தி தேமுதிக அலுவலகத்தில் அறிவிக்கப்படும். தேமுதிக அலுவலகத்துக்கு எடப்பாடி வரவுள்ளார். நாளைக்கு மிகப் பெரிய செய்தியை அறிவிப்போம். தேர்தல் என்றால் பலமுனை போட்டி வரும். பல தேர்தலை சந்தித்துள்ளது அதிமுகவும், தேமுதிகவும். எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. யார் யார் கூட்டணி சேர்க்கிறார்கள் என்பது தான் முக்கியம். இந்தக் கூட்டணி இயற்கையான கூட்டணி. அதிமுக, தேமுதிக எல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தவர்கள்தான். ஆனால், இம்முறை எங்கள் கட்சி நிர்வாகிகள் அதிமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என விரும்பினர். மேலும் முதலில் எங்களை அணுகியது அதிமுகதான். தேர்தல் என்பதால் பலர் போட்டியிடத்தான் செய்வார்கள். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எனது வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்